கல்முனையிலும் நீக்கப்பட்டது நினைவேந்தல் தடை உத்தரவு.
கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டது.
கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம் எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு மீள் நகர்த்தல் முறை மூலம் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகளான நடராஜா சிவரஞ்சித், ரி.மதிவதனன், றிபாஸ் ஆகியோர் இதனை மீள் தாக்கல் செய்திருந்தனர்.
அதனை ஏற்ற நீதிவான் சம்சுதீன் விசாரணை செய்து பரிசீலனைக்கு உட்படுத்தினார்.
பெரியநீலாவணைப் பொலிஸ் பொறுப்பதிகாரி வாதங்களை முன்வைத்தார் .
அதற்கு எதிராகச் சட்டத்தரணிகளான நடராஜா சிவரங்சித், ரி.மதிவதனன் மற்றும் றிபாஸ் ஆகியோர் தலையிட்டு நியாயமான வாதங்களை முன்வைத்தார்கள் .
அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சம்சுதீன், “பொதுமக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராத வகையிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பதாகைகளை, சின்னங்களைக் காட்சிப்படுத்தாமல் தங்களது மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை யாரும் தடை செய்ய முடியாது. எனவே, அமைதியாக நினைவேந்தலைச் செய்யலாம்.” – என்று நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
கல்முனை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த ஐவருக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், சமூகச் செயற்பாட்டாளர்களான தாமோதரம் பிரதீபன், விநாயகம் விமலநாதன் மற்றும் த.செல்வராணி ஆகியோருக்கே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திலும் இவ்வாறு விதிக்கப்பட்ட தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.