கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்! – உயிரிழந்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி.
இறுதிப் போரில் அரச படைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு கண்ணீர்விட்டு அழுதவாறு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் காலை 10.30 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிக மோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிப் பந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் இன்று நடைபெற்றன.