சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் – சுமந்திரன் எம்.பி. ஒன்றரை மணிநேரம் பேச்சு!
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் அம்மையார் முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினார். அதற்கு முன்னர் இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை முல்லைத்தீவு ‘அலை’ சுற்றுலா விடுதியில் காலை உணவுடன் சந்தித்து சுமார் ஒன்றரை மணிநேரம் விரிவான கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
முல்லைத்தீவு சுயாதீன செய்தி வட்டாரங்கள் இந்தச் சந்திப்பு பற்றி முதலில் தகவல் வெளியிட்டன. அது குறித்து விசாரித்தபோது அதனைச் சுமந்திரன் எம்.பி. ஊர்ஜிதம் செய்தார்.
”இன்று காலை 8 மணி தொடக்கம் 9.30 மணி வரை சந்திப்பு நடைபெற்றது. காலை உணவுடன் ஒன்றரை மணிநேரம் மிக ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியல் தீர்வு, பொறுப்புக் கூற வைத்தல் பற்றி எல்லாம் ஆழமாக உரையாடினோம்.
ரோம் ஒப்பந்தத்தில் இலங்கையை ஒப்பமிட வைக்கும் அழுத்தத்தை நாம் அரசுக்குத் தொடர்ந்து கொடுப்பதை நல்ல உத்தியாக அவர் வரவேற்றார்.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வைப்பதற்கு, அந்த ஒப்பந்தத்தில் இலங்கையைக் கையெழுத்திட வைப்பதுதான் ஒரே மார்க்கம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.” – என்றார் சுமந்திரன் எம்.பி.