கொழும்பில் நடந்த இன மத பேதமற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos & Video)
30 வருடகால யுத்தத்தினால் வடக்கிலும், தெற்கிலும் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (17) கொழும்பு , விஹார மகாதேவி பூங்காவில் இடம்பெற்றது.
வடக்கிலும், தெற்கிலும் , இறந்த அனைவரையும் ஒன்றாக நினைவு கூர்ந்து, வென்ற அமைதியை மேலும் பாதுகாத்து ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம், குளோபல் தமிழ் மன்றம், கொழும்பு இளம் பௌத்த சங்கம் , யாழ் செல்வநாயகம் அறக்கட்டளை, தர்மசக்தி அமைப்பு, சங்க கதிகாவ போன்ற அமைப்புக்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தன.
முக்கிய உரைகளை கொழும்பு இளம் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வநாயகம் அறக்கட்டளையின் பணிப்பாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆற்றினர்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சிறிபால அமரசிங்க ஆகியோருடன், சமாதி பஹ்மன – தேசிய பசுமை முன்னணி ஆகியவையும் கலந்து கருத்துகளை வெளியிட்டனர்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பிரதான ஆலோசகர் Patrick McCarthy இராஜதந்திர மட்டத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
பௌத்த மத குருக்கள் , கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் சுவிஸ் தூதர் மற்றும் ஊழியர்கள், ஜப்பானிய தூதரகத்தின் பிரதிநிதிகள், அமெரிக்க தூதரக பிரதிநிதிகள், தாய்மார்கள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மக்கள்,இறந்தவர்களின் நினைவாக ஒன்று கூடினர். விளக்கு ஏற்றினர்.