ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி: மீட்புப் பணியில் சிக்கல் (Video)
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.
அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.