வழக்காளியுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப் பேச்சு நடத்துங்கள்! – தமிழரசின் மத்திய குழு வழிகாட்டல்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்த வழக்காளியின் சட்டத்தரணியுடன் நேரடியாக பேசி நீதிமன்றத்துக்கு வெளியிலேயே ஓர் இணக்கத் தீர்வைக் காணவும், அதை நீதிமன்றத்தில் முன்வைத்து வழக்குக்கு விரைந்து முடிவு கட்டவும் நடவடிக்கை எடுக்கும்படி இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழிகாட்டுதல் விடுத்தது.

இன்று காலை 10:30 மணியளவில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய கட்சியின் மத்திய குழு பிற்பகல் 3 மணிக்கு மதிய இடைவேளைக்காக இடைநிறுத்தும் வரை கட்சிக்கு எதிரான வழக்கு விடயம் குறித்தே விவாதித்தது.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கோரிக்கை மதிய போசன இடைவேளைக்குப் பின்னரே ஆராயப்பட இருந்தது.

வழக்கு விடயம் நீண்ட வாத பிரதிவாதங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது. அது தொடர்பான தீர்மான வாசகங்களை சுமந்திரனே வரையறுத்துக் கொடுத்தார்.

கட்சியின் தலைவர் தெரிவு உட்பட அனைத்தையும் மீள ஆரம்பத்திலிருந்து தொடங்குவோம், எல்லா விடயங்களையும் யாப்புக்கு அமையவே கையாள்வோம் என்பன போன்ற வாக்குறுதிகளை வழக்காளியின் சட்டத்தரணியுடன் உரையாடி அளிப்பதன் மூலம் வழக்கை நீதிமன்றத்தில் விரைந்து சுமுகமாக முடிவுறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயத்தை சுமந்திரனே ஏனைய சட்டத்தரணிகளையும் இணைத்துக் கொண்டு முன்னெடுக்க வேண்டும் என இன்று நண்பகலை ஒட்டிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.