ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதையடுத்து ஆம்ஆத்மி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை பிபவ் குமார் தாக்கியதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
சுவாதி மலிவால் விவகாரத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து முதல்வர் கெஜ்ரிவால், காணொளி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மே 19ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பகுதி முழுவதும் பாஜகவினரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தலைமை அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிடத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் நூற்றுக் கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த வட்டாரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பாஜக தலைமையகம் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தன் தொண்டர்களிடம் ஆற்றிய உரையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆம்ஆத்மி மீது எத்தனை குற்றச்சாட்டுகளைத்தான் சுமத்துவார்கள். மதுபானக் கொள்கை என்று கூறினார்கள்.
அதுதொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் வீடுகளில் சோதனை மேல் சோதனையாக நடத்தி தொல்லை கொடுத்தனர். ஆனால், அவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளில் எவ்விதத் தடயமும் அவர்களுக்குச் சிக்கவில்லை.
உண்மையிலேயே ஊழல் நடந்திருந்தால் அதில் இருந்து கிடைக்கப்பெற்ற ரொக்கம், தங்கம், பத்திரங்கள் என ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது பாஜக அரசு கைப்பற்றியதா என்பதே மக்களின் இன்றையக் கேள்வியாக உள்ளது. இதில் இருந்து பாஜக அரசு பொய்யான வழக்குகளைத் தொடர்ந்து ஆம்ஆத்மி தலைவர்களை கைதுசெய்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது,” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.