விமானப் பயணி ஒருவர் மரணம், 30 பேர் காயம் , தற்போதைய நிலவரம்?
லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால் பாதிக்கப்பட்டது. அதில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 12 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மே 21ஆம் தேதி, எஸ்ஐஏ நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
மாண்ட ஆடவர், பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதுப் பயணி என்று சுவர்ணபூமி விமான நிலையப் பொது மேலாளர் கிட்டிபொங் கிட்டிகசோர்ன், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்தப் பயணி மாரடைப்பால் காலமானதாகக் கருதப்படுவதாக அவர் கூறினார்.
காயமடைந்த மேலும் பலரில் ஏழு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டோரில் ஒன்பது பேர் விமானச் சிப்பந்திகள் என்றும் திரு கிட்டிபொங் கூறினார்.
விமானம் திசைதிருப்பிவிடப்பட்டதாகவும் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் பிற்பகல் 3.45 மணியளவில் அது அவசரமாகத் தரையிறங்கியதாகவும் எஸ்ஐஏ குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஊடகங்கள் சில, இச்சம்பவத்தில் 30 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த போயிங் 777-300இஆர் ரக விமானத்தில் 211 பயணிகளும் 18 சிப்பந்திகளும் இருந்ததாக எஸ்ஐஏ தெரிவித்தது.
மாண்ட பயணியின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்கியூ321 விமானத்தின் பயணிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் உதவிவருவதாக எஸ்ஐஏ தெரிவித்தது.
தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதன் தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக அது குறிப்பிட்டது. கூடுதல் உதவி வழங்க, ஒரு குழுவை பேங்காக் அனுப்புவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மாண்ட பயணியின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரிகளும் ஊழியர்களும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், எஸ்கியூ321 விமானம் கடுமையாக ஆட்டங்கண்டதில் ஒருவர் உயிரிழந்தது, மேலும் பலர் காயமடைந்தது குறித்து மிகவும் வருத்தமடைவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மாண்ட பயணியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொண்ட அதிபர், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற அனைவரும் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
இவ்வேளையில், லண்டனிலிருந்து கிளம்பிய 11 மணி நேரம் கழித்து, 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென்று ஐந்தே நிமிடங்களில் 6,000 அடி கீழ்நோக்கிச் சரிந்ததாக ஃபிளைட்ரேடார்24 தகவல்கள் கூறுகின்றன. அப்போது அது தாய்லாந்திற்கு அருகே அந்தமான் கடலின் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்த ஆண்ட்ரூ டேவிஸ் எனும் பயணி, சம்பவத்தில் மாண்ட ஆடவர் தன் மனைவியுடன் பயணம் செய்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பலருக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் காதில் ரத்தம் வடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் பொருள்கள் விமானம் முழுவதும் சிதறிக் கிடப்பதாகவும் காயமின்றித் தப்பித்த மற்ற பயணிகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் ஒரு தற்காலிக இடத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பயணிகள் தாயகம் திரும்பத் தேவையான உதவிகளை சிங்கப்பூர்க் குழுவினருடன் இணைந்து தாய்லாந்து அதிகாரிகள் மேற்கொள்வர் என்று உறுதியளித்த திரு கிட்டிபொங், சில பயணிகள் காயமடைந்த தங்கள் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்வதற்காக பேங்காக்கிலேயே தங்க விரும்புவதாகக் கூறினார்.