அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை! அதனால் நல்லிணக்கம் இன்னமும் சாத்தியமாகவில்லை என சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் மனோ சுட்டிக்காட்டு.
“அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை. இவை இத்தனை தூரம் இழுப்பட்டுப் போவதற்குச் சர்வதேச சமூகமும் காரணமாக அமைந்து விட்டது.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தன்னைச் சந்தித்து உரையாடிய இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி திருமதி சிரி வோல்ட்டிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனோ எம்.பியின் இல்லத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின் அரசியல்துறை முதலாம் செயலாளர் செல்வி ஜஸ்டின் பொய்லாவும் கலந்துகொண்டார்.
இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ்-தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மலையக சமூகத்தைச் சார்ந்த பெருந்தோட்டப் பிரிவினரின் வாழ் நிலைமை ஆகியவை பற்றி சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட், அரசியல்துறை முதலாம் செயலாளர் ஜஸ்டின் பொய்லா ஆகியோரும், நானும் மிக விரிவாக உரையாடினோம்.
உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய மசோதா மூலம் இலங்கை அரசு கொண்டுவர முயலும் உண்மை ஆணைக்குழு பற்றி பேசினோம். ஆனால், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை. இவை இத்தனை தூரம் இழுப்பட்டுப் போவதற்குச் சர்வதேச சமூகமும் காரணமாக அமைந்து விட்டது. ஆகவே, இலங்கை தொடர்பான இதுவரையிலான உலக சமுதாயக் கொள்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என நான் கோரியுள்ளேன்.
மேலும், மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில், இந்நாள் வரை இழந்த அரசியல் சமூக சமூக உரிமைகளை மீளப்பெற சுவிட்சர்லாந்து எமக்கு உதவ வேண்டும். மலையகத் தமிழர் இந்நாட்டில் சுமார் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் சிறுபான்மையினர் என்றபடியால், அரசியல் யாப்பு ஏற்பாடாக நிலவரம்பற்ற சமூக சபை அமைக்கப்பட வேண்டும் என நாம் முன்மொழிவு செய்து வருகின்றோம்.
எமது இந்த முன்மொழிவுகள் செம்மையாக்கப்பட வேண்டும். அதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டின் நிலவரம்பற்ற சிறுபான்மையினருக்கு வழங்கபட்டுள்ள அதிகாரப் பகிர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகின்றோம்.” – என்றுள்ளது.