இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் , இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்.
இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நால்வரும் , சஹாரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்தத் தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி , இலங்கையிலிருந்து அகமதாபாத் நகருக்கு சென்ற , இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினரால் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிறு கைது செய்யப்பட்டனர். .
இது தொடர்பில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குஜராத் பொலிஸ் மா அதிபர் விகாஷ் சாஹே, இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஓரு நபர் 33 வயதான மொஹமட் நுஸ்ரத் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவரோடு கொழும்பில் வசிக்கும் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.
அவர்கள் இலங்கையிலிருந்து , சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மொழியை மட்டுமே பேசும் , நான்கு ISIS பயங்கரவாதிகளும் , மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர்.
இரு நாடுகளின் கையடக்கத் தொலைபேசிகள், கரன்சிகள் மற்றும் விமானப் பயணச்சீட்டுகள் என்பன அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவரின் சூட்கேஸில் ISIS கொடியும் காணப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள ISIS குழுவுடன் தொடர்புடையவர்
பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அறிமுகமானதாகவும், அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 4 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், தற்கொலைத் தாக்குதலுக்குக் கூட அவர்கள் தயாராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதங்கள்
அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்துள்ளன.
அதனடிப்படையில் தேடிய போது , பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்த 20 மகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் சோதனை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.