முதலில் நாடாளுமன்றத் தேர்தல்! ரணில் இரகசிய நடவடிக்கை!! – டிலான் பகிரங்கம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்ட அடிப்படையில் இரகசியமாகச் செய்து வருகின்றார் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின்படி, இந்த வருடம் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி விரும்பினால் அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.
எல்லோரும் ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியோ நாடாளுமன்றத் தேர்தலைத்தான் முதலில் நடத்துவதற்கு இரகசியமான முறையில் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கி வரும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷகூட, நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தினால் அரசுக்கு ஏற்படப் போகும் நன்மை பற்றி ஜனாதிபதிக்குப் பஸில் விளக்கிக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான் ஜனாதிபதி மேற்படி முடிவை எடுத்துள்ளார். ஆனால், அவர் வெளியே ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று காட்டுகின்றார்.” – என்றார்.