நடுவானில் ஆட்டங்கண்ட SIA விமானம் – மாண்ட 73 வயதானவர் ஒரு சமூகச் சேவகர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டபோது மாண்ட 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஜியோஃப் கிச்சன் (Geoff Kitchen) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் தொன்புரி (Thornbury) நகரைச் சேர்ந்த அவர் பல்லாண்டுகளாய்ச் சமூகச் சேவையாற்றியவர் என்று தெரியவந்துள்ளது.
உள்ளூர் இசை நாடகக் குழுவில் முக்கியப் பங்காற்றிய கிச்சன், சென்ற ஆண்டு நகரமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
“35 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் சமூகத்திற்குச் சேவையாற்றிய நேர்மையாளர் கிச்சன்,” என்று தொன்புரி இசை நாடகக் குழு Facebookஇல் பதிவிட்டது.
ஓய்வுபெற்ற கிச்சன் தமது மனைவியுடன் 6 வார உல்லாசப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்ததாக அவருடைய அண்டை வீட்டுக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
விமானம் ஆட்டங்கண்டபோது கிச்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிச்சனின் மனைவி தற்போது பேங்காக்கில் மருத்துவ உதவி பெற்று வருகிறார்.
ஆட்டங்கண்ட Boeing 777-300ER ரக விமானம் லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டது.
நடுவானில் ஆட்டங்கண்டதால் அது தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டது.
இன்று அதிகாலை சிறப்பு விமானத்தில் 131 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் சிங்கப்பூருக்குத் திரும்பினர்.
79 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இன்னும் பேங்காக்கில் இருப்பதாகக் கூறப்பட்டது.