வானம் தெளிவாக இருந்தால்கூட விமானம் ஆட்டங்காண வாய்ப்புண்டா?

“விமானம் 6,000 அடி கீழிறங்கியது! இருக்கை வார் அணியாமல் இருந்தோர் மேலே பறந்தனர்”

தெளிவான வானத்திலும் விமானம் ஆட்டங்காணும்

எதனால் இந்நிலை ஏற்படுகிறது?

✈️வளிமண்டலத்தில் அழுத்தம் (atmospheric pressure)

✈️சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் ஏற்படும் காற்றழுத்தம்

✈️குளிர், வெப்பமான வானிலை

✈️இடியுடன் கூடிய மழை


ஆகியவை ஏற்படும்போது விமானம் ஆட்டங்காண வாய்ப்பிருப்பதாக அமெரிக்க மத்திய விமானத்துறை கூறுகிறது.

“அது எதிர்பாராவிதமாக நடக்கும்; வானம் தெளிவாக இருந்தால்கூட விமானம் ஆட்டங்காண வாய்ப்புண்டு” என்றது அத்துறை.

அது வழக்கமான காரணங்களில் ஒன்று.

தெளிவான வானத்தில் குளிரான வெப்பமான காற்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது விமானம்
ஆட்டங்காணும்.

இதனால் காற்றின் வேகத்திலும் திசையிலும் கணிக்க முடியாத மாற்றம் ஏற்படும். விமானம் அதைக் கடந்துசெல்லும்போது ஆட்டங்காணும். நிலைமை கடுமையாக இருந்தால் உயரத்தில் பறக்கும் விமானம் திடீரென தாழ்நிலைக்குத் தள்ளப்படும்.

இந்தச் சூழ்நிலையைப் பெரும்பாலான விமானப் பயணிகள் அனுபவித்திருக்ககூடும் என்றது விமானத்துறை.

விமானங்கள் ஆட்டங்கண்ட மிக அண்மைச் சம்பவங்கள்:

1 மார்ச் 2023

டெக்சஸில் கிளம்பி ஜெர்மனிக்குப் பயணம் செய்த Lufthansa Flight 469 விமானம் கடுமையாக ஆட்டங்கண்டது.

37,000 அடியில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் திடீரென 4,000 அடி தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

7 பயணிகள் காயமுற்றனர்.

18 டிசம்பர் 2022

அரிஸேனாவில் இருந்து ஹவாய் சென்றுகொண்டிருந்த Hawaiian Airlines விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் ஆட்டங்கண்டது.

36 பேர் காயமுற்றனர்; அவர்களில் சிலர் கடுமையாகக் காயமடைந்தனர்.

21 மே 2024

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

SIA விமானச் சம்பவம் - சிங்கப்பூருக்குத் திரும்பிய 131 பயணிகள், 12 விமான ஊழியர்கள்விமானம் ஆட்டங்காணும்போது பதற்றத்துடன் செயல்பட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்” – விமானத்துறை நிபுணர்  

விமானம் நடுவானில் ஆட்டங்காணும் சம்பவங்களைப் பற்றி படித்திருப்போம், கேட்டிருப்போம்.

ஆனால் விமானம் ஆட்டங்கண்டதால் பயணி மரணமடைவது குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுவதில்லை.

விமானம் ஆட்டங்கண்டால் உயிருக்கு எப்படி ஆபத்து நேரிடலாம் என்பதை அறிய ‘செய்தி’ விமானத்துறை நிபுணரான அக்மாலுடன் பேசியது.

“பதற்றத்துடன் செயல்பட்டால் உயிருக்கு ஆபத்து”

“இக்கட்டான சூழ்நிலையில் முடிந்தவரை நிதானமாகச் செயல்படுவது முக்கியம். பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பதற்றமடைந்தால் தெளிவாக யோசிக்க இயலாது. அதுபோன்ற தருணங்களில் விரைவாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும். இல்லாவிடில் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்,” என்று அக்மால் ‘செய்தி’யுடன் பகிர்ந்தார்.

“பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்தால் காயமடையலாம்”

“பொதுவாக விமானம் ஆட்டங்காண்பதற்கு முன்பே இருக்கை வாரை அணிந்துகொள்ளுமாறு விமானி பயணிகளிடம் கேட்டுக்கொள்வார். ஒருவேளை பயணி அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல் இருந்தால் அவர் காயமடையலாம்; அது மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்” என்று அவர் சொன்னார்.

உடனுக்குடன் செயல்படப் போதிய நேரம் இல்லை

“மோசமான வானிலையால் விமானம் திடீரென ஆட்டங்காணும்போது விமானியும் பயணிகளும் உடனுக்குடன் செயல்படப் போதிய நேரம் கிடைக்காவிட்டால் அது பேராபத்தை விளைவிக்கலாம். எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாக இருந்தால் உயிருக்கே ஆபத்து நேரலாம்,” என்றார் அக்மால்.

“பயணிகளுக்கு ஏற்கெனவே உடல்நலக் கோளாறுகள் இருந்தால் பிரச்சினை”

பயணிகளுக்கு ஏற்கெனவே உடல்நலக் கோளாறுகள் இருந்தால் அத்தகைய இக்கட்டான தருணங்களில் மனவுளைச்சல் ஏற்படலாம்; அது ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

விமானத்தில் பயணம் செய்யும்போது எப்போதும் இருக்கை வார் அணிந்து கொள்வது பாதுகாப்பானது என்று அக்மால் வலியுறுத்தினார்.

அக்மால் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.