ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு தூதரகம் சென்று சஜித் இரங்கல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஈரான் தூதரகத்துக்குச் சென்று மறைந்த ஜனாதிபதிக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக் குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.

“ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைகின்றோம். விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய இழப்பாகும்.” – என்று ஈரான் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“ஈரானும் இலங்கையும் நெடுகாலமாக நட்போடு திகழ்கின்றன. இலங்கையின் அபிவிருத்திக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பல ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளார். விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துக்கு ஈரான் அரசு நிதி உதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.” – என்றும் ஈரான் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.