மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்!
மட்டக்களப்பில் இயற்கையாகக் கருத்தரித்து ஒரே சுகப் பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
நான்கு குழந்தைகளும் தாயும் நலமாக இருக்கின்றனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டு. போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டு. புதுக்குடியிருப்பைச் சோந்த 25 வயதுடைய கரிகரின் கிருஷ்ணவேனி வெளிநாட்டில் இருக்கும்போதே கருத்தரித்துள்ளார். 8 வாரங்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இவர், மட்டு. போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுப் பிரிவில் கிளினிக்காக வந்த வேளை கதிர்வீச்சு மூலம் சோதனை செய்தபோது 4 குழந்தைகள் கருத்தரித்திருப்பதைக் கண்டுபிடித்தோம்
ஏற்கனவே சிசேரியன் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ள இவர், இயற்கையாகவே கருத்தரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரை மிக நெருக்கமாகக் கண்காணித்துப் பராமரித்து வந்தோம்.
இந்தநிலையில், ஒரு ஆண், 3 பெண்கள் உட்பட 4 குழந்தைகளைச் சுகப் பிரசவம் மூலம் அவர் பெற்றெடுத்துள்ளார்.” – என்றார்.