இங்கையில் நீதி மரணித்துவிட்டது! பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது!! – சிறீதரன் எம்.பி. காட்டம்.
“இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. இங்கு நீதி செத்துவிட்டது. பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சாதாரண பொதுமகன் ஒருவரை வாளால் வெட்டும் கொடூர வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கின்றது.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த சிறீதரன் எம்.பி., மேலும் பேசுகையில்,
“மிருசுவில் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கு இலங்கைச் சட்டம் மரணதண்டனை வழங்கியது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தவுடன் அந்தப் பிரதான குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். இது இலங்கையின் நீதித்துறையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நாட்டில் மிகப் பெரிய கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கு விடுதலை வழங்கப்படுகின்றது.
இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. பலரும் நீதிக்காகப் போராடி வருகின்றனர். இங்கையில் நீதி செத்துவிட்டது. ஆனால், நாட்டில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதேவேளை, இந்த நாட்டிலே பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சாதாரண பொதுமகன் ஒருவரை வாளால் வெட்டும் கொடூர வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றறிக்கை ஒன்று வெளியிடும்போது தனிச் சிங்கள மொழியில் மட்டும் வருகின்றது. அண்மையில் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கூட தனிச் சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
சட்டம் என்பது இனத்துக்கானது அல்ல. அது மொழிக்கானது அல்ல. நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடியவாறு சட்டம் இருக்க வேண்டும். இல்லையேல் அது சட்டம் அல்ல. இந்த நாட்டினுடைய சட்டத்துறை நம்பிக்கை தரக்கூடியதல்ல. அது சகல இனங்களையும் அரவணைத்துச் செல்லவில்லை.
கஞ்சிப்பானையைத் தூக்கியெறியும் பொலிஸாருடைய காலத்தில் எப்படி இந்த நாட்டில் நல்லிணக்கமும், நீதியும், நியாயமும் கிடைக்கும்?” – என்று சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.