மாயமான 12 வயது மாணவன் பிக்குவானார்! கதிர்காமம் விகாரையொன்றில் கண்டுபிடிப்பு!!

புத்தளம், மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல்போன 12 வயது மாணவன் கதிர்காமம் விகாரையொன்றில் தங்கிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
மேற்படி மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்குச் சென்றுள்ளார் என்றும், அதன் பின்னர் அந்த மாணவனின் விருப்பத்தின்படி கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட மேற்படி மாணவன் அவரது விருப்பத்துக்கிணங்க கடந்த 20 ஆம் திகதி “மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் எனக் கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல்போனார் எனத் தெரிவிக்கப்பட்ட அந்த மாணவன், கதிர்காமம், கௌதம சதகம் அரன விகாரையில் இருக்கின்றார் என மதுரங்குளி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் என்றும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப்போவதில்லை என “மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.