ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பகல் நேரத்தில், தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாது.
இதனால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலையில் மூன்று முறை வெடிச் சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் அதிர்வுகள், 3-4 கிலோ மீட்டருக்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தால், எழுந்த கரும்புகையில் இருந்து சாம்பல் துகள்கள் மழைத் தூறல் போல் விழுந்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையின் அருகில் இருந்த கார் விற்பனையகம், மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகளும், கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து சிதறியுள்ளன.
இந்த விபத்தில், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 7 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பகல் நேர பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளதாக, அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அத்துடன், இந்தச் சம்பவத்துக்கு காரணமான தொழிற்சாலையின் 8 அதிகாரிகள் கடமையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.