மக்களவை தேர்தலில் போட்டியிடும் 121 பேர் கல்வியறிவு இல்லாதவர்களா?
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 121 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. தேர்தலில் களம் கண்டுள்ள 1188 வேட்பாளர்கள் மீது தீவிர கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைக்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் பகுப்பாய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மொத்த வேட்பாளர்களில் 121 பேர் படிப்பறிவில்லாதவர்கள் என கூறப்பட்டுள்ளது. 359 பேர் ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளனர். 647 பேர் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.
1,303 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், 1,502 பேர் டிகிரி முடித்தவர்கள் என்றும் ஏடிஆர் தெரிவித்துள்ளது. 198 வேட்பாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். தேர்தலில் போட்டியிடும் 8,360 வேட்பாளர்களில், 1,644 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 1,188 வேட்பாளர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்புப் பேச்சுகள் என தீவிர கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த வேட்பாளர்களில் வெறும் 792 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள். அதாவது 10 சதவிகிதத்துக்கும் குறைவாக 9.5% பெண்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சொத்து மதிப்பின் அடிப்படையில், 5,705 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கும் ஆந்திராவின் தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர் சந்திரசேகர பெம்மசானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் பாஜக வேட்பாளர் கொன்ட விஷ்வேஷ்வர் ரெட்டி 4,568 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் தொழிலதிபரும், பாஜக வேட்பாளருமான நவீன் ஜின்டாலின் சொத்து மதிப்பு 1,241 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.