யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாகத் தரமுயர்வு – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
புதிய கட்டடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சைக் கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவப் பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.
இந்தக் கட்டடத் தொகுதி 70 கோடி ரூபா செலவில் கல்வி அமைச்சில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்துப் பூர்த்தி செய்ய இன்னமும் 13 கோடி ரூபா தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.