சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை: இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு நிலையத்தில் இன்று விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.
மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 6பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 18 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 616 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 880 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தருணத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அரச திணைக்களங்கள், மாவட்ட அரச அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிவாரண சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்புப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்ககாக முன்னெடுத்து வரும் துரித நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.
அண்மைக்காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
‘சுரகிமு’ நிகழ்ச்சியின் மூலம் பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தில் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக வீழ்வதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் ஆதரவையும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், வீதியோரம் மரங்கள் நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசர நிலைகளை எதிர்கொள்ளப் பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கமகே தர்மதிலக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.