வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பல பணிகளைச் செய்த ஜனாதிபதி! – ரணிலை நேரில் பாராட்டிய சித்தார்த்தன்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.”

இவ்வாறு புளொட் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் (24) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு வழங்கப்படும் இந்தக் கட்டடமானது வடக்குக்கு வழங்கப்படும் அபிவிருத்தியின் மற்றுமொரு உதாரணமாகவே நான் காண்கின்றேன்.

குறிப்பாக காணி வழங்கல் விவகாரம் தொடர்பில் வடக்கு மக்களின் சார்பாக அவர் தீர்மானங்களை எடுத்தார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.