வடக்கு, கிழக்கு மக்களுக்குக் காணிப் பிரச்சினையால் கடும் பாதிப்பு! – யாழில் ஒப்புக்கொண்டார் ரணில்.

“காணிப் பிரச்சினை வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரச காணிகளில் குடியேற்றப்பட்ட மக்களைத் தவிர யுத்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் ஏராளம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் (24) கலந்துகொண்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 1286 இலவசப் பத்திரங்கள் மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாளமாக சிலருக்கு வழங்கி வைத்தார்.

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு 13 ஆயிரத்து 858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில்,.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வடமாகாண வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இந்த இலவச காணி உரிமைத் திட்டம் அதன் ஒரு படியாகும். உறுமய வேலைத்திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம்.

நாட்டு மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும். அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் மண்ணில் முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டதுபோன்று, இந்தப் பணி எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும். காணி ஆணையாளர் திணைக்களத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால், பணிகள் சற்று தாமதமாகி வருகின்றன.

அதுபற்றி கலந்துரையாடிய பிறகு, காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்திற்கு 100 புதிய பணியாளர்களையும், நில அளவைத் திணைக்களத்திற்கு 150 பேரையும் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை மிகவும் திறமையான முறையில் நடைமுறைப்படுத்த முடியும்.

காணிப் பிரச்சினை வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரச காணிகளில் குடியேற்றப்பட்ட மக்களைத் தவிர யுத்தத்தால் காணிகளை இழந்தவர்கள் ஏராளம். தீர்க்கப்பட வேண்டிய இரண்டு பிரச்சினைகள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது என்னுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதற்கமைவாக, பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடி, பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள காணிகளில், காணி விடுவிக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்களில் அந்த அனைத்து காணிகளும் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், வனவளப் பாதுகாப்புத்துறை கையேற்ற காணிகள் குறித்தும் பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல. தென் மாகாணத்திலும் இந்தப் பிரச்சினை உள்ளது. எனவே, 1985 வரைபடத்தின்படி, காடுகளாக உள்ள பகுதிகளை, காடுகளாக பேணவும்,

மீதமுள்ள காணிகளை காடு அல்லாத பகுதிகளாக கருதவும் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளோம். தற்போது அது தொடர்பில் ஆலோசித்து வருவதோடு குறிப்பிட்ட காணிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். தொல்பொருளியல் திணைக்களத்தின் கீழும் அதிக அளவிலான காணிகள் உள்ளன. தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு தேவையான காணிகளை தவிர்த்து ஏனைய காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இந்தக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன், யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. விசேட ஆய்வுகளின் பின்னர் மேலும் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நாட்டின் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்க எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன், கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இம்மாகாண மக்களுக்கு தேவையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்க முடியவில்லை.ஆனால் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அது ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூற விரும்புகிறேன்.

இந்த இலவச பத்திரங்களை வழங்குவதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றுதான் கூற வேண்டும். இலவசப் பத்திரங்களை வழங்குவதை இந்நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் திட்டம் என்று கூறலாம்..

ஜப்பான், கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் அந்த வகையில் மக்களுக்கு காணி உரிமை வழங்கவில்லை. ஆனால், ஜப்பானும் கொரியாவும் மக்களுக்கு இலவசமாக காணி உரிமையை வழங்கவில்லை. குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை மட்டுமே தருகிறது. ஆனால் எமது நாட்டில் மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்குவதற்காக செயற்பட்டு வருகின்றோம்.

பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலும் மட்டக்களப்பில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இலங்கை மக்கள் தங்கள் இனம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும் பாரம்பரியமாக காணி உரிமையை மதிக்கின்றனர். இன்று நீங்கள் அதை சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள். அந்த நிலத்தைப் பாதுகாத்து உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பது உங்கள் பொறுப்பு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.”- என்றார்.

Leave A Reply

Your email address will not be published.