4 மாதங்களில் ரூ.197 கோடி… மோசடி வலையில் சிக்கும் பெங்களூரு மக்கள்!
பெங்களூரு மக்களிடம் கடந்த 4 மாதங்களில் முதலீடு என்ற பெயரில் 197 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அண்மை காலங்களில் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. வீட்டில் இருந்து வேலை செய்தால் வருமானம், விளம்பரம் பார்த்தால் வருமானம், யூடியூப்பில் லைக், கமெண்ட் செய்தால் வருமானம் என்று பல்வேறு விதமான மோசடிகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அத்துடன், பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறியும் மோசடிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகளில் வெறும் 10% வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, பங்குச் சந்தை மோசடிகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை விசாரிக்க சைபர் க்ரைம் போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர். இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 237 மோசடியில், ரூ. 88 கோடியை மக்கள் இழந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. அதாவது, பங்குச் சந்தை, மியூட்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய விரும்புவோர், தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் பேசியும், போலியான செயலிகளின் மூலமும் ஏமாறுகின்றனர். மோசடிகள் குறித்து போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும், மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும், பங்குச் சந்தை குறித்து நன்கு அறிந்தவர்கள் என்றும் பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். பேராசையால்தான் மக்கள் பணத்தை இழக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள இளம் முதலீட்டாளர்களும் இதுபோன்ற போலியான முதலீட்டு திட்டங்களுக்கு மயங்கி, அதிக அளவில் பணத்தை இழக்கின்றனர். தெரியாத நபர்களாக இருந்தால் கூட அவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம் என்றும், ஆனால் நன்கு படித்த நபர்களே இதுபோன்ற மோசடிகளில் சிக்கி லட்சக்கணக்கான தொகையை இழப்பது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற மோசடிகளில் ரூ.197 கோடியை இழந்துள்ளதாகவும், இது சாதாரண தொகை இல்லை என்றும் கூறியுள்ள காவல்துறை இணை ஆணையர், மக்களின் அறியாமையே இது காட்டுகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.