மோடி தங்கிய ஹோட்டல் ரூம் – 80 லட்சம் பில் இன்னும் கட்டல? எச்சரிக்கை விடுத்த ஹோட்டல் நிர்வாகம்!!
பிரதமர் மோடி தங்கிய ஹோட்டல் ரூமிற்கு 80 லட்ச ரூபாய் பாக்கி இருக்கும் காரணத்தால், அந்த ஹோட்டல் நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடி நாடு முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். அப்படி கடந்த ஆண்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) ஏற்பாடு செய்த 50 ஆண்டுகால புலித் திட்ட நிகழ்வைத் துவக்கி வைப்பதற்காக மோடி மைசூரு சென்றிருந்தார்.
மைசூருவில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி அன்று இரவு தங்கிய நிலையில், மறுநாள் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பங்கேற்றார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதற்காக வந்து தங்கிய நட்சத்திர ஓட்டலில் வாடகை கட்டணம் 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த 80 லட்சம் வாடகை பாக்கியை இதுவரை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதில் தான், தற்போது வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரேடிசன் ப்ளூ பிளாசா நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலின் பொது மேலாளர், வனத்துறை அதிகாரிக்கு கடந்த மே 21ஆம் தேதி எழுதிய கடிதத்தில், ஹோட்டல் சேவையை பயன்படுத்தி 12 மாதங்கள் முடிந்த பிறகும் அதற்கான பில் தற்போது வரை செலுத்தப்படவில்லை. தாமதமாக செலுத்துவதற்கு ஆண்டுக்கு 18% தாமத வட்டியாக ₹12.09 லட்சத்துடன் சேர்த்து பாக்கியை செலுத்த வேண்டும். ஜூன் 1’க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுருக்கிறார்.
சுமார் 3 கோடி செலவில் ஏப்ரல் 9 முதல் 11 வரை மாநில வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டு 100% மத்திய உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, MoEF மற்றும் NTCA இன் மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி குறுகிய அறிவிப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியின் மொத்த செலவு ₹6.33 கோடியாக உயர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. அதில், மத்திய அரசால் சுமார் ₹3 கோடி விடுவிக்கப்பட்டிருந்தாலும், மாநில வனத் துறைக்கும் MoEF-க்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடந்தாலும் மீதி ₹3.33 கோடி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.