கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு நிலையம் ரணிலால் திறப்பு.
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 532 கோடி ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது .
2006 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார வசதிகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்குச் சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.
இன்று திறந்து வைக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு மையம், வடக்கில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் பிரசவத்தை மேம்படுத்துவதுடன், புதிதாகப் பிறந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வடக்கு மாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பான நிலையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை அவதானிப்பதிலும் இணைந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் போனி ஹோபேக், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மதகுருமார்கள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.