அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அநுரவின் ஆட்சியில் தீர்வு உறுதி! – விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் எனவும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை மாத்திரமே தற்போது தெரிவு செய்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பிரதமர் யார், வெளிவிவகார அமைச்சர் யார், அமைச்சரவைக்கு நியமிக்கப்படும் நபர்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானம் இல்லை. எனினும், அமைச்சரவையின் எண்ணிக்கை 25 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும் காணப்படும்.
அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று நிறுவப்படும். அதில் துறைசார் நிபுணர்கள் இருப்பார்கள். அவர்களுக்குச் சம்பளம், சலுகைகள் வழங்கப்படமாட்டாது. அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவார்கள்.” – என்றார்.