தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் பிரதமர் மோடி குமரியில் தியானம்
கடைசி கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிந்த பின்னர், கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளவுள்ளார். 2019 தேர்தலின் போது இமய மலையில் தியானம் செய்த பிரதமர், இந்த முறை குமரி முனைக்கு வரவுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்கிறது. இந்நிலையில்,தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பரப்புரை முடியும் நாளில் கன்னியாகுமரிக்கு வந்து, வினேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, டெல்லியில் இருந்து 30-ஆம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். பின்னர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார். 24 மணி நேர தியானத்திற்குப் பிறகு ஒன்றாம் தேதி காலை, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை முடிந்த பின்னர், கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குகையில், ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். கடந்த முறை இமயத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி, இந்த முறை குமரிமுனை நோக்கி வரவுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போதும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் வழிபாடு நடத்தியதுடன், அக்னி தீர்த்த கடலில் நீராடி, புனித நீரை அயோத்திக்கு எடுத்துச் சென்றார். மக்களவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த பிரதமர் மோடி, குறுகிய இடைவெளியில் பலமுறை தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்காக வந்தார்.
இந்நிலையில், கடைசி கட்ட தேர்தலின் வாக்குபதிவுக்கு முன்பாக, தியானம் செய்வதற்கு, பிரதமர் மோடி குமரி வர இருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.