பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைப்பு: மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்
மதுரை: இளம்பெண் ஒருவருக்கு அறுவைச் சிகிச்சையின் போது வயிற்றில் மருத்துவ துணியை வைத்து தைத்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து மதுரை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் வயிற்று வலி காரணமாக தனியாா் மருத்துவமனைக்கு கடந்த 2016 மாா்ச் 15 -ஆம் தேதி சென்றாா். அங்கு, அவருக்கு கருப்பையில் நீா்க் கட்டி இருப்பதாகக் கூறி, மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா். பிறகு, வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு தொடா்ந்து வயிற்று வலி இருந்ததால், மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா். அந்த மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும், வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன், வயிற்றில் மருத்துவத் துணியை வைத்துத் தைத்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அந்தப் பெண் மதுரையில் உள்ள மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். எஸ். கருப்பையா தலைமையிலான ஆணையத்தின் விசாரணை நிறைவில், தவறான அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட திருச்சியை சோ்ந்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.