இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரிக்கக் கோரி பிரிட்டன் பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின்போது, பிரிட்டன் பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் மனு, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதைப் பிரிட்டன் அரசு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப் படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் என்ற அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைச் செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர்.

இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதைப் போல், பிரிட்டன் நாடாளுமன்றமும் இலங்கையில் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்குத் தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவ வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவுகளின் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மஹிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைப் பின்பற்றி பிரிட்டன் அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மனுவை இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரிட்டன் வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, இலங்கையின் இறுதிப் போரின் நிறையில் வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டரின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரியின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பராவின் பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணனின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளையின் சகோதரியான மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியத்தின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாகப் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.