தேர்தல்களை 2 வருடங்களுக்கு ஒத்திவைத்து பொது வாக்கெடுப்புக்கு ஐ.தே.க கோரிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு நீடிக்க , சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது.
அதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று (28) முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்கள் நீடிக்குமாறு குறித்த தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இதுவே சிறந்த தெரிவாகும் என பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக இது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இது இன்றியமையாததாகும்.
அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் ஜனநாயகமானது என பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.