தேர்தல்கள் பிற்போடப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – சுமந்திரன் எச்சரிக்கை.
“மக்கள் ஆணை இழந்த நாடாளுமன்றம், மக்கள் ஆணை இல்லாமல் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது. இந்தநிலையில், அரசமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலையும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்குப் பிற்போட எண்ணினால் அது நாட்டில் மீண்டுமொரு பாரிய மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏற்கனவே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதனை உடனடியாக நடத்துவதற்கான சட்டமூலங்களை இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றேன்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நிதி இல்லை என்ற பொய்யான காரணத்தைக் கூறி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுவதாக இருந்தால் நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதாகவே கருத வேண்டும்.” – என்றார்.