கேரளாவில் பிரியாணி உடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி
மேலை நாடுகளில் உணவு வகைகளில் பயன்படுத்தி வந்த மயோனைஸ், இப்போது இந்தியாவிலும் மக்களின் ஃபேவரைட்டாக மாறியுள்ளது. வயது பேதம் இல்லாமல் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில், கேரளாவில் மயோனைஸ் உடன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் அருகே பெரிஞ்சனம் என்ற ஊரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
கடந்த 25ஆம் தேதி உணவகத்தில் உணவு அருந்திய 170க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், ஏமன் நாட்டின் பிரபல உணவான ‘குழிமந்தி’ என்ற பிரியாணியுடன் மயோனஸையுடன் சேர்த்து சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்துக்குஅதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பிரியாணியை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்டவர்களில் ஒருவரான குடிலக்கடவு பகுதியைச் சேர்ந்த 56 வயது நுசைபா என்ற பெண் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்தார்.
இதனிடையே, இது போன்ற கெட்டுப்போன இறைச்சி உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.