ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் ரணில் உறுதி! – நாடாளுமன்றத் தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்கிறார் ஹரின்.
“மக்கள் ஆணையுடனேயே ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நிச்சயம் நடைபெறும்.”
இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
‘ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. இரண்டு தேர்தல்களும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடர வேண்டும்’ – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளாரே?” – என்று ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹரின் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“அவ்வாறு இல்லை, தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் ஆசியுடன் வெற்றி பெறுவதையே ஜனாதிபதி ரணில் விரும்புகின்றார். தேர்தலில் போட்டியிடவுள்ளதை அடுத்த வாரமளவில் அவரே அறிவிப்பார். ஜனாதிபதித் தேர்தலில் அவர் களமிறங்குவதும், வெற்றி பெறுவதும் உறுதி.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவார்கள். அதற்கான நேரம் வரும். அதுவரை காத்திருப்போம். நாடாளுமன்றத் தேர்தலும் உரிய நேரத்தில் நடைபெறும். அதுவும் ஒத்திவைக்கப்படாது.” – என்றார்.