ஊர்க்காவல்துறை விடுதி பெண் வார்டனின் தாக்குதலை தாங்க முடியாத 11 மாணவிகள் போலீசில் சரண் : வார்டன் கைது.
நேற்று யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் விடுதியில் இருந்த 11 மாணவிகள் பொலிஸில் சரணடைந்ததையடுத்து விடுதியின் பெண் கண்காணிப்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவிகள் சரணடைந்த நேரத்தில் பேசக்கூட முடியாத அளவுக்கு மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளை, தான் வைத்தியசாலைக்கு சென்று , அவர்களை சந்திக்கும் வரை வெளியார் எவரையும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கைகளும் ஒவ்வொருவரது தனி தனியான விவரத்தையும் உள்ளடக்கியதாக பெற வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை பொலிஸில் வந்து சரணடைந்த போது மாணவிகளிடம் வாக்குமூலம் பெற முடியாதவாறு தாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவிகள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் விடுதி வார்டனை கைது செய்த பொலிசார் ஊர்க்காவத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, வார்டனை இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகளின் பெற்றோருக்கும் மாணவிகளைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கக் கூடாது எனத் தெரிவித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பாக மாணவிகளிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்று, யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் மிக விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். .