பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்ற சிலரால் சஜித் கட்சிக்குள் குழப்பம்! முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம் என்று பொன்சேகா வலியுறுத்து.

“ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்தப் பார்க்கின்றனர். எமது கட்சிக்குள் முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“கட்சிக்குள் உள்ள சிலர் பிரதமர் பதவி குறித்து கனவு காண்கின்றனர். மேலும் சிலர் தேசியப் பட்டியலுக்காகப் போராடுகின்றனர். அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துள்ள சிலரும் இருக்கின்றனர். இவ்வாறு கனவு காண்பவர்கள்தான் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனைச் சீர்செய்யாவிட்டால் கட்சியாக முன்னோக்கிப் பயணிக்க முடியாது. அது கட்சிக்கே பெரும் பின்னடைவாக அமையும். மக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி நாட்டை மீட்க முடியாது. முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம். விவாதித்துக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. செயலில்தான் காட்ட வேண்டும்.” – என்றார்.