புவியீர்ப்பு விசையால் 4.6 வினாடிகளில் 178 அடி இறங்கிய விமானம்.

புவியீர்ப்பு விசையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் காரணமாக எஸ்கியூ321 விமானம் 4.6 வினாடிகளில் 178 அடி கீழே இறங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் எஸ்கியூ321 விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) லண்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய வேளையில் மியன்மார் வான்பகுதியில் பறந்துகொண்டு இருந்தபோது காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.
விமானம் கடுமையாக ஆட்டங்கண்டு குலுங்கியதன் காரணமாக 73 வயது பிரிட்டிஷ் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
அச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் முதற்கட்ட விசாரணை முடிவுகள் வெளிவந்து உள்ளன.
வான்வெளியில் வேகமாகச் சரிந்து ஆட்டம் கண்டதன் காரணமாக பயணிகளுக்கும் விமானப் பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதனை போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு புதன்கிழமை (மே 29) வெளியிட்டது.
விமானத் தகவல் பதிவுக் கருவியில் இருந்தும் விமானியின் அறையில் இருந்த குரல் பதிவுக் கருவியில் இருந்தும் எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து அமைச்சின் ஒரு பகுதியான போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு விமானம், கப்பல் மற்றும் ரயில் விபத்துகள் மற்றும் சம்பவங்களை விசாரிக்கும் ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.
எஸ்கியூ321 விமான விபத்து விசாரணைக் குழுவில் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு மன்றம், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுடன் போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தோரும் இடம்பெற்று உள்ளனர்.
எஸ்கியூ 321 விமானம் போயிங் 777-300இஆர் என்னும் ரகத்தைச் சேர்ந்தது.
பிற்பகல் 3.49 மணி 21 வினாடி சிங்கப்பூர் நேரப்படி மியன்மாரின் தென்பகுதியில் 37,000 அடி உயரத்தில் புயல்காற்று உருவாகக்கூடிய பகுதியில் அது பறந்துகொண்டு இருந்தபோது விமானம் குலுங்கத் தொடங்கியது. அதனை பயணிகள் உணரத் தொடங்கினர்.
பின்னர் விமானம் மேல்நோக்கி பறந்து 37,362 அடியை எட்டியது. தானியங்கி விமானி சாதனம் அந்த விமானத்தை வழக்கமான விமானப் பாதைக்குக் கீழிறக்க முயன்றது.
பிற்பகல் 3.49 மணி 32 வினாடி ஆனபோது இருக்கை வாரை அணிவதற்கான எச்சரிக்கை பயணிகளுக்கு விடுக்கப்பட்டது. விமானம் குலுங்கி ஆட்டம் காணத் தொடங்கியதையும் 19 வினாடிகளுக்கு அது நீடித்ததையும் விசாரணைக் குழுவினர் கண்டறிந்தனர்.