காற்றாலைகள் மூலம் நாள்தோறும் 10 கோடி யூனிட் மின்சாரம்.
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகள் மூலம் பத்து கோடி யூனிட் மின்சாரம் கிடைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஜூலை 9ஆம் தேதியன்று 12.02 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது என்றும் இதுவே காற்றாலை மூலம் கிடைத்த ஆக அதிகமான மின்சாரம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் எனக் குறிப்பிடப்படுகிறது.
இச்சமயம் தமிழக காற்றாலைகளில் இருந்து நாள்தோறும் ஏறக்குறைய 8 முதல் 9 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் பத்து கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும்.
கடந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதி 11.7 யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது எனில், நடப்பாண்டில் மே மாத தொடக்கத்தில் இருந்தே 9 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது என்றும் போகப்போக அளவு அதிகரித்து, தற்போது 10.27 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
மே மாதத்தில் காற்றாலைகள் மூலம் 10 கோடி யூனிட் மின்சாரம் கிடைப்பது முதல்முறை என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காற்றாலை மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் தனியார் துறையினரும் காற்றாலை மின் உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர்.