கார் ஓட்டியதில் விதிமீறல்… யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகரில் போலீசார் கைது செய்தனர்.
கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் கடந்த ஆண்டு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்வதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால், டிடிஎப் வாசனின் இருசக்கர வாகன உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தனர்.
இந்த நிலையில், சென்னை அய்யப்பாக்கத்தில் இருச்சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வரும் டிடிஎப் வாசன், அங்கு விலை உயர்ந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை செய்துவருவதாகவும், இதனால் சாலைகளில் வாகன நெரில் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் சென்றிருக்கிறது.
இதையடுக்கு ஆவடி காவல் ஆணையரக உத்தரவின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் விற்பனையகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வைத் தொடர்ந்து விலை உயர்ந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனைக்கு தடை விதித்து போலீசார் நோட்டீஸ் அளித்தனர்.
இந்த நிலையில், கார் ஓட்டுவதற்கு எல்எல்ஆர் விண்ணப்பித்த டிடிஎப் வாசன், சில நாள்களுக்கு முன்பு மதுரையில் செல்போனில் பேசியபடி காரை கவனக்குறைவாக ஓட்டியதால் அவரை கைது செய்த அண்ணாநகர் போக்குவரத்து காவல்துறை போலீசார், அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி காரை ஓட்டியதால் மதுரை மாநகர ஆயுதப்படை போலீசார் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.