உரிய காலத்தில் தேர்தலை நடத்தும் வகையில் அரசமைப்பை மாற்ற வேண்டும்! – சித்தார்த்தன் வலியுறுத்து.

அமெரிக்கா போல் இலங்கையிலும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தும் வகையில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று புளொட் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் என்ன, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தால் என்ன அந்தக் காலத்துக்குள் தேர்தல் நடத்தபட வேண்டும். தேர்தலைப் பிற்போட்டுத் தாம் விரும்பியபடி ஜனநாயகத்தை மறுக்கின்ற செயற்பாட்டைத் தொடர்ந்து வந்த அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவின் அரசமைப்பு போல் இலங்கையிலும் தேர்தலைப் பிற்போடாமல் உரிய காலத்தில் அதை நடத்தும் அரசமைப்பு இங்கும் உருவாக்கப்பட வேண்டும். அப்போது இங்கே ஜனநாயகம் சிறக்கும் .
தமிழ்ப் பொது வேட்பாளர் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். இதை உணர்ந்து தமிழ்த் தரப்புக்கள் செயற்பட வேண்டும்.” – என்றார்.