விமர்சனங்களுக்குத் திங்கட்கிழமை தக்க பதிலடி! – பாலித அதிரடி அறிவிப்பு.
“ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற எனது கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை உரிய பதிலடி கொடுப்பேன்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்குக் கொண்டுவர தற்போதுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுவது நல்லது. அது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொண்டுவருமானால் அது மிகவும் பொருத்தம் எனத் தெரிவித்திருந்தேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த யோசனையை நான் தெரிவித்த பின்னர், அதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் பல்வேறு விமர்சனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். எமது கட்சி அலுவலகத்துக்கு முன்பாக 7 பேர் வரை வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
எனவே, இந்த விடயங்கள், விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் அனைத்துக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரிய பதிலடி கொடுப்பேன்.” – என்றார்.