சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை – மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியை சேர்ந்தவர் செம்பியன் முத்தையா. இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
தாய்ப்பால் விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்தூரி கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளார். இந்த சோதனையின் முடிவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவது சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்குமத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் நடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலேயே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.