சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்; மூன்று மாதச் சிறை.
தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதமும் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மேலும் வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படமாட்டாது. அதிவேகத்துக்கான அபராதத் தொகை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருக்கும்.
“மேலும் புகை வெளியீடு விதிமுறைகளைக் கடுமையாக்கி அதிக புகையை வெளியிடும் ஒன்பது லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்,” என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக 18 வயதுக்குட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை ஓட்டுவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விபத்துகளைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பல்வேறு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள மத்திய அரசு, ஜூன் 1ஆம் தேதி முதல் அவற்றை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் வரப்பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் அவை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.