சிங்கப்பூரில் உயிரிழந்த சிவராமனின் நல்லுடல் சொந்த ஊரில் தகனம்.
சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (மே 23) நச்சுவாயு தாக்கி உயிரிழந்த 40 வயது இந்திய ஊழியர் சீனிவாசன் சிவராமனின் நல்லுடல் மே 29ம் தேதி அதிகாலை தமிழகத்தை அடைந்தது.
திருச்சி அனைத்துலக விமான நிலையத்திற்கு வெளியே தயாராக வைக்கப்பட்டிருந்த மருத்துவ வாகனத்தில் ஏற்றப்பட்ட சிவராமனின் உடல் சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் உள்ள கம்பர்நத்தம் எனும் அவரது சொந்தக் கிராமத்தைச் சென்றடைந்தது.
உடல்கூராய்வுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிவராமனின் உடலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றுக்கொண்ட அவரது மைத்துனர் மோகன் நவீன்குமார், 33, செவ்வாய் இரவு சிவராமனின் நல்லுடலோடு இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, புதன்கிழமை காலை குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் கிராமத்தினர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சிவராமனின் பூர்வீக இல்லத்தில் அவரது நல்லுடல் வைக்கப்பட்டபோது முதன்முதலாக சிவராமனின் மறைவு குறித்து அவரது இரு மகள்கள் மஹாஸ்ரீ, 9, ஸ்ரீநிஷா, 7, ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, சிவராமனின் மனைவி நர்மதா மற்றும் மகள்கள் இருவரும் மே 2ஆம் தேதி அன்றுதான் கோடை விடுமுறையில் சிங்கப்பூர் வந்திருந்தனர்.
சுமார் ஒரு மாத காலம் குடும்பமாகச் சிங்கப்பூரில் விடுமுறையைக் கொண்டாடிவிட்டு ஜூன் மாதம் ஊருக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், மே 23ஆம் தேதியன்று சுவா சூ காங்கில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழக நீர்நிலைய சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயுவை சுவாசித்ததால் சிவராமன் உயிரிழந்தார். அதனால், செய்வதறியாது திகைத்த நர்மதா, மறுநாள் தனது பிள்ளைகளுடன் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் சென்றார்.
இதற்கிடையே, சிவராமனின் மகள்களிடம் தந்தையின் மறைவுச் செய்தியை பற்றி விவரித்தார் நவீன்குமார்.
“அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றுதான் பிள்ளைகளிடம் சொல்லி வைத்திருந்தோம். ஆறு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் சிவராமனின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத பிள்ளைகளிடம், அழக்கூடாது, என்று சொல்லி அவர்கள் கண்ணீரைத் துடைத்தபடியே நானும் அங்கு கூடியிருந்தவர்களும் ஆறுதல்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தோம்.
அப்போது சிவராமனின் மூத்த மகள் மஹாஸ்ரீ என்னிடம், “அப்பாவை நான் பார்ப்பது இதுதான் கடைசி முறை; அப்பா இனி என்னோடு இருக்க போவதில்லை; பிறகு நான் எப்படி அழாமல் இருக்க?” என்று கேட்ட தருணம் என் இதயம் உடைந்துவிட்டது,” என்று நினைவுகூர்ந்தார் நவீன்குமார்.
பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிவராமனின் நல்லுடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு புதன்கிழமை (மே 29) பிற்பகல் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.