யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – என்.சரவணன்
99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு
ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.
தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.
70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.
யார் இந்த சிறில் மெத்தியு
“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது… கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” அவர் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.
சிறில் மெத்தியு, பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, ஹெக்டர் ஜெயவர்த்தன, ஜே.ஆர்.ஜெயவர்த்தன |
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புமிக்கதாக இருந்தது. மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோவிலடியில். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.
“தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது’ என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி.
மா.க. ஈழவேந்தன் தமிழினத்தின் மீதான பண்பாட்டுப் படுகொலை என்றார்.
“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் போது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன. இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”
“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”
தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் அறியப்பட்டது அது.
யாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
“அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது “க” போதை நிலையில் இருந்தார். 1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே:”
என்று கேட்ட கேள்விக்கு.
கணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதகாகத் தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை…. நானோ, சிறில் மெத்தியுவோ, காமிநியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”
ஐவன்: 83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?
கணேசலிங்கம்: “1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்லஅரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது அவ்வளவு சிக்கலைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்”
ஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்கம் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”
“1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிர பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பியதோடு குழப்பமும் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொளுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்” என்றார்.
அன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.
“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் திரு.காமினியே பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கரை படிந்த துரயரமான சமவமாகும்… மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்…
மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதிநாசவேலைகள் இடம்பெற்றபின்னர் ஒரு சர்வதேச நூல்நிலயமான யாழ் நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..”
26.10.1991 ஈழநாடு பத்திரிகையில் வெளியான செய்தி |
அழிப்பின் சிகரம்
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது. Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
யாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது.
(11.06.1982 வீரகேசரி செய்தி)
கால வரிசைப்படி யாழ் நூலக வரலாற்றுக் குறிப்பு
- Thurairajah, V.S., The Jaffna Public Library Rises From Its Ashes, (2007)
- Selvarajah, N. ed., Jaffna Public Library- A historic compilation (2001)
- http://www.vikalpa.org/?p=6895
- பொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம்- க.சி.குலரத்தினம் (மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் – 1984
- யாழ்ப்பா பொதுசன நூலகம் (எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள்) 01.06.2015 – தங்க முகுந்தன்
- மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது – 1981
- Burning Memories of Jaffna Library Full Documentary – Someetharan
- யாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு எ.செல்வராஜா
- யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது – வி.எஸ்.துரைராஜா