இதுவே ஹர்த்தால் போராட்ட வெற்றி சொல்லும் செய்தி் என்கின்றார் : சரவணபவன்

 

“தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், நீதிமன்றக் கட்டளைகளை மீறாது சாவகச்சேரி சிவன் கோயில் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அதைப்போன்று, எமது நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்படும் தடைகளையும், ஏனைய தமிழ் மக்கள் மேல் தொடரப்படும் அநீதிகளையும் கண்டித்து நேற்று தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டமையும், அக்கட்சிகளின் அழைப்பின் பேரில் தமிழர் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் வெற்றி பெற்றமையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உடைத்தெறிய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன என்ற செய்தியை சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தியுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் அமைதி பூண்டு பூரண ஹர்த்தால் போராட்டத்துக்குத் தாங்கள் வழங்கும் பங்களிப்பின் வீச்சை வெளிப்படுத்தியிருந்தன. வீதிகள் வெறிச்சோடியும், கடைகள் தொழில் நிலையங்கள் பூட்டப்பட்டும், போக்குவரத்துகள் இன்றியும் எங்கும் காணப்பட்ட அமைதி தமிழ் மக்களின் இதயங்களில் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் உரிமை வேட்கையாக எங்கும் வியாபித்து இருந்தது.

அதுமட்டுமின்றி நேற்றைய ஹர்த்தாலானது ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் தலைமையில் எமது மக்களும் எமது உரிமைகளுக்காகப் போராட ஐக்கியப்பட்ட சக்தியாக எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தியுள்ளது.

செப்டெம்பர் 26 நிகழ்வுகளும், செப்டெம்பர் 28 நிகழ்வுகளும் எமது நீதிக்கான போராட்டத்தில் தற்சமயம் ஒன்றிணைந்த சக்தியாக வெளிப்படுத்தப்படும் ஒரு ஆரம்பமே. இந்த ஆரம்பமானது தொடர்ந்து எம்மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், எமது உரிமைகளைப் பெறுவதற்காகவும் தொடர்ந்து விரிவடையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்பு அரசியல் அதிகாரம் இராணுவ மயப்பட்டு வருகிறதென்பதை நாம் அறிவோம். பொதுவாகவே சிவில் நிர்வாகத்தின் உயரதிகாரிகளாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும், பணியிலுள்ள இராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் எம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளும், இராணுவ மயப்பட்டு மேற்கொள்ளப்படும் அல்லது இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதி சந்தேகமில்லை. அதேவேளையில் நீதிமன்றங்கள் கூட பொலிஸாரால் எமது உரிமைகளுக்கு எதிராக வழிநடத்தப்படும் என்பதை திலீபனின் அஞ்சலி நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடை எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

நாம் உரிமையுள்ள இனமாக வாழவும், இன அழிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட உறுதியான தமிழ்த் தலைமைகளின் ஐக்கியத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களே ஒரே ஆயுதம் என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

நேற்றைய எழுச்சிகரமான பூரண ஹர்த்தால் போராட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு எமது உரிமைப் போராட்டத்தையும் தொடர்ந்து எமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் உடைத்தெறிந்து நீதிக்கான நெடும்பயணத்தில் முன் செல்வோம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.