ஜீவன் தொண்டமானை விட்டு விலக மெய்ப்பாதுகாவலர்கள் முடிவு : வேலை செய்வது கடினம்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் அவரை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.
அமைச்சரின் தற்போதைய செயற்பாடுகளால் கடமைகளை நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதாகவும் , இதன்படி, அவர்கள் தமது கடமை துப்பாக்கிகளை மீள ஒப்படைத்துள்ளதாகவும், அமைச்சர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் இருந்து தற்காலிகமாக விலகியதாக தெரிய வந்தது.
எவ்வாறாயினும் திடீரென மாற்று உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்துவதில் உள்ள சிரமம் காரணமாக அமைச்சரின் பாதுகாப்புக்காக அதே அதிகாரிகளை மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் தோட்ட நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டார்.
இது தொடர்பிலும் அதற்கு முன்னரும் அமைச்சரின் செயற்பாட்டை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் இருந்து , தம்மை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிகளை ஏற்றுக்கொள்ளுமாறு தலவாக்கலை பொலிஸாரிடமிருந்து பொலிஸ் தொலைபேசிச் செய்தியும் கிடைத்தது.
சில மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை அதே அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி செய்தியின் அடிப்படையில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவை கையளிக்கப்பட்டன.
நேற்று (01) இரவு 11 மணியளவில் தலவாக்கலை பொலிசுக்கு வந்த மெய்ப்பாதுகாவலர்கள் மீண்டும் துப்பாக்கிகளை மீள பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.