இனி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத் அல்ல.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக செயல்பட்டு வந்த ஹைதராபாத் நகரம் ஜூன் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அம்மாநிலத்தின் தலைநகராக செயல்படாது.

2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானது. அப்போது இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு தலைநகராக செயல்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக செயல்படும், ஆந்திரா புதிய இடத்தை அதற்கான தலைநகராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து அந்த சட்டம் தற்போது நடப்புக்கு வந்துள்ளது.

இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வந்தபோதே அப்போது ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, முக்கியமான நிர்வாக அமைப்புகளை ஆந்திராவின் பல்வேறு இடங்களுக்கு மாற்றினார்.

அமராவதியில் புதிய தலைமைச் செயலகத்தையும் அவர் கட்டினார். ஹைதராபாத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசத்தின் நீதிமன்றங்களையும் வேறு இடங்களுக்கு மாற்றினார்.

தற்போது ஹைதராபாத்தில் துறவிகளுக்கான கட்டடம், குற்றவியல் விசாரணை அமைப்பின் கட்டடம், லேக் வியூ விருந்தினர் இல்லம் ஆகிய மூன்று கட்டடங்களை மட்டும் தான் ஆந்திர அரசாங்கம் வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

“ஆந்திர அரசாங்கம் இந்த மூன்று கட்டடங்களுக்கும் நிரந்தரமான இடத்தை முடிவு செய்ய நேரம் தேவைப்படுவதால் மேலும் ஓர் ஆண்டுக்கு இந்த கட்டடங்கள் ஹைதராபாத்தில் செயல்பட அனுமதி தர வேண்டும் என்று தெலுங்கானா அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டடங்களுக்குத் தேவையான வாடகையும் தருவதாக ஆந்திர அரசாங்கம் கூறியதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ குறிப்பிட்டது.

ஆந்திர பிரதேசம் தனக்கான தலைநகரை இன்னும் தேர்தெடுக்கவில்லை. அமராவதியா இல்லை விசாகப்பட்டினமா என்று குழப்பம் நீடிக்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தாம் மீண்டும் வெற்றிபெற்றால் ஆந்திராவின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும், அமராவதி சட்டப்பேரவைத் தொகுதியாக இருக்கும், குர்னூல் நீதித்துறைக்கான தலைநகராக இருக்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, லேக் வியூ விருந்தினர் இல்லத்தை ஜூன் 2ஆம் தேதி முதல் பயன்படுத்திக்கொள்ள தெலுங்கானா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.