டி20 உலகக்கோப்பை: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தி நமீபியா வெற்றி.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 109 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து போட்டி டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் நடந்தது. அதில் நமீபியா வெற்றி பெற்றது. கத்துக்குட்டி அணிகள் ஆடிய போட்டி என்றாலும் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஓமன் அணி முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்து மோசமான துவக்கத்தை பெற்றது. அதன் பின் நிதானமாக ஆடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களையும் இழந்தது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசி முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்திய ரூபன் டிரம்பிள்மேன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். டேவிட் வீஸ் 3.4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். எராஸ்மஸ் 2 விக்கெட்களும், பெர்னார்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து நமீபியா அணி சேஸிங் செய்தது. 110 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அந்த அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி நிதானமாக ஆடியது. கையில் விக்கெடுகள் இருந்த போதும் தேவையில்லாமல் நிதானத்தை காட்டியதால், கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.
கடைசி ஓவரை ஓமன் அணியின் மெஹ்ரான் கான் வீசினார். அவர் முதல் பந்தியிலேயே ஜான் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து இரண்டாவது பந்தில் ரன் கொடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஜேன் கிரீன் விக்கெட் வீழ்த்தினார். கடைசி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தது நமீபியா. இதை அடுத்து போட்டி டை ஆனது.
பின்னர் விதிப்படி சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வீஸ் மற்றும் எராஸ்மஸ் பேட்டிங் செய்தனர். டேவிட் வீஸ் முதல் இரண்டு பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் சேர்த்தார். கடைசி இரண்டு பந்துகளில் எராஸ்மஸ் இரண்டு ஃபோர் அடித்தார். இதை எடுத்து சூப்பர் ஓவரில் நமீபியா 21 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஓமன் அணி 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேஸிங் செய்தது. அந்த அணியின் நசீம் குஷி முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஆகிப் இலியாஸ் களத்துக்கு வந்தார். அவர் நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தது ஓமன். அப்போதே அந்த அணியின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரின் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது ஓமன் அணி. இதை அடுத்து சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி பெற்றது.