பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது – கொதித்தெழுந்த கெஜ்ரிவால்!
ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் திஹார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து பேசினார். அப்போது,
“டெல்லி மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய மகன் இன்று மீண்டும் சிறையில் சரணடையப்போகிறேன். நான் ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்படவில்லை. சர்வாதிகாரத்துக்கு எதிராக நான் குரல் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். அவர்கள் 500க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் ஒரு ரூபாயைக்கூட கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் போலியானவை.
ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் மொத்த மக்களவைத் தொகுதியின் எண்ணிக்கையே 25 தான். இப்போதுள்ள முக்கியமான பிரச்சினையே, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் ஏன் இவ்வாறு போலியான கருத்துக்கணிப்பை நடத்தினார்கள்?
இது தொடர்பாக பல தியரிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்சிக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.